வழியோர கடைகளை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மூணாறில் வழியோரக் கடைகளை அகற்றுவதற்கு போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மூணாறில் போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டம் எம்.எல்.ஏ. ராஜா தலைமையில் நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுபணி, வருவாய், போக்குவரத்து, ஊராட்சி, போலீஸ் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
முடிவு: பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் நகர் வரை, மாட்டுபட்டி ஆகிய பகுதிகளில் வழியோரக் கடைகள் அகற்றப்படும். நகரின் மையப் பகுதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொறுப்பு பொதுப்பணிதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் அருகில், கார்க்கில் ரோடு ஆகிய பகுதிகளில் டூவீலர்கள் நிறுத்த வேண்டும்.
மாட்டுபட்டி ரோட்டில் வனத்துறை பூந்தோட்டம் அருகே வாகனங்கள் நிறுத்தக் கூடாது.
மாறாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான ஐந்தாம் மைலில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த கூடாது.
அங்கு வனத்துறையினரின் வாகனம் நிறுத்தும் இடத்தை பயன்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த முடிவுகள் போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்ற போதும் நடைமுறைபடுத்துவதற்கு அதிகாரிகள் முன் வருவது இல்லை.