Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

100 கோடி மதிப்பிலான சந்தன மரங்கள் சேதம்

சின்னார் வன உயிரின சரணாலயத்தில் விழுந்து கிடக்கும் 100 கோடிக்கு அதிகமாக விலை மதிப்புள்ள சந்தன மரங்கள் அழிந்து சேதமாகி வருகின்றன.

மூணாறு அருகே மறையூர் சந்தன பிரிவுக்கு கீழ் 119 சதுர கி.மீ., சுற்றளவில் சந்தன மரங்கள் பெரும் அளவில் உள்ளன. அங்கு விழுந்து கிடக்கும் சந்தன மரங்கள், கடத்தலில் சிக்கும் கட்டைகள் ஆகியவை சந்தன டிப்போவில் பாதுகாக்கப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டு தோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது.

மறையூர் அருகே கேரள-தமிழக எல்லையில் உள்ள சின்னார் வன உயிரின சரணாலயத்தினுள் இயற்கை சீற்றங்கள், வனவிலங்குகளின் அத்துமீறல்கள் ஆகியவற்றால் நூற்றுக் கணக்கில் சந்தன மரங்கள் முறிந்து கீழே விழுந்து கிடக்கின்றன. உலர்ந்த நிலையில் சந்தன மரங்கள் ஏராளம் உள்ளன.

விதிமுறை: வனவிலங்கு சரணாலயம், புலிகள் காப்பகம், தேசிய பூங்கா ஆகியவற்றில் விழுந்து கிடக்கும் மரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றக்கூடாது என விதிமுறைகள் உள்ளதால் சின்னார் வன உயிரின சரணாலயத்தினுள் விழுந்து கிடக்கும் சந்தன மரங்களை அகற்ற இயலவில்லை. அதனால்100 கோடிக்கும் அதிகமாக மதிப்புள்ள மரங்கள் அழிந்து வருகின்றன.

கடத்தல்: தமிழகத்தில் ஆனமலை புலிகள் காப்பகம் அருகே சின்னார் வன உயிரின சரணாலயம் உள்ளதால் கடத்தல்காரர்கள் எளிதில் சரணாலயத்திற்குள் நுழைந்து சந்தன மரங்களை கடத்தி செல்கின்றனர். சரணாலயத்தினுள் விழுந்து கிடக்கும் சந்தன மரங்களை வனத்துறையினர் சேகரித்து பாதுகாக்கவும், விற்பனை நடத்தவும் வசதியாக அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *