ஊராட்சி செயலாளர்கள் முதல்வருக்கு கடிதம்
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள் 2018 முதல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.
ஓய்வூதியமாக தற்போது மாதம் ரூ. 2ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆக.,21ல் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதில் இருந்தும் 40 ஆயிரம் கடிதங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பினர்.தேனியில் தலைமை தபால் நிலையத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
துணைத்தலைவர் முத்துக்குமரன், மகளிரணி தலைவி தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், திருப்பதி, சுருளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செப்.,27 ல் சென்னையில் பனகல் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக கூறினர்.