உயிர் வாழ பரிதவிக்கும் மயில்
மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் நடமாடும் மயில் உயிர் வாழ பரிதவித்து வருகின்றது.
மூணாறு பகுதியில் சமீப காலமாக மயில்கள் நடமாட்டம் காணப்படுகின்றன. அவை கேரள- தமிழக எல்லையில் உள்ள சின்னார் வனஉயிரின சரணாலயத்தில் இருந்து வழி தப்பி வந்ததாக கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் ஒரு சில மயில்கள் நடமாடிய நிலையில் தற்போது பெரியவாரை, கன்னிமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் பத்துக்கும் அதிகமானவை காணப்படுகின்றன.
இந்நிலையில் கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கடந்த ஓராண்டாக நடமாடும் மயில் ஒன்று உயிர் வாழ பரிதவித்து வருகிறது. அங்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வலம் வரும் மயில் தெரு நாய்களுக்கு அஞ்சி பகலில் தேயிலை தோட்டங்களில் உள்ள பாறைகளிலும், இரவில் குடியிருப்புகளின் மேல் கூரையிலும் தஞ்சம் அடைந்து உயிர் தப்பி வருகிறது. அந்த மயிலை பாதுகாக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.