437 பேர் ‘லைசென்ஸ்’ பயன்படுத்த 6 மாதங்களுக்கு தற்காலிக தடை:
மாவட்டத்தில் ஆகஸ்டில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட 17 விபத்துகளில் 17 பேர் உயிரிழந்தனர். வாகன விபத்துக்களை தடுக்க போலீசார், போக்குவரத்துத்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டர். இதில் விதிமீறியதாக 437 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் 6 மாதத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போக்குவரத்து துறை, டிராபிக் மற்றும் உள்ளூர் போலீசார் விதிமீறி வாகனம் இயக்குபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கின்றனர்.
போக்குவரத்து விதிமீறுபவர்கள் கண்காணித்து அவர்களது விபரங்கள், பயன்படுத்தும் வாகனத்தின் பதிவு எண் விபரம் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட 5 சப் டிவிஷன்கள், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் ஆகஸ்டில் விதிமீறலில் ஈடுபட்ட வாகன உரிமையாளர்கள், அவர்களது ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரைத்தனர்.
அதன்படி தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம், உத்தமபாளையம் கிளை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 23 வாகன உரிமையாளர்கள், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்று 45 வாகனங்கள், கனரக வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற 34 வாகன உரிமையாளர்கள், வாகனங்களை ஓட்டும் போது அலைபேசி பயன்படுத்திய 66 பேர், மது குடித்து, போதையில் வாகனங்களை இயக்கிய 17 பேர்,சிக்னல்களை மீறிசென்ற 235 வாகன உரிமையாளர்கள் என மொத்தம் 420 பேரின் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்ய போலீசார் வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரைத்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 17 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுத்திய குற்றம் புரிந்த 17 வாகன உரிமையாளர்களை சேர்த்து, மொத்தம் 437 பேரின் லைசென்ஸ் 6 மாத காலத்திற்கு பயன்படுத்த தற்காலிக தடை விதித்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.