Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேட்டில் தவிப்பு சருத்துப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி

பெரியகுளம் ஒன்றியம், சருத்துபட்டி ஊராட்சியில் இரு ஊரணிகளிலும் சாக்கடை சங்கமம் ஆவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது.

சருத்துபட்டி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு கால்நடை வளர்ப்பு அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

ஊராட்சிக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 6 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குறைந்த அளவாக ஒரு லட்சம் லிட்டர் மட்டும் வழங்கப்படுகிறது.

கைலாசபட்டி பாப்பிபட்டி கண்மாய் அருகே பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த கிணற்றில் போதுமான குடிநீர் இருந்தும் ஊராட்சி நிர்வாகம் முறையாக சப்ளை செய்யததால் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. வடுகபட்டி -தேனி பைபாஸ் ரோட்டில் ஊராட்சி குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.

இதில் இருந்து வெளியோகும் புகையால் அருகே உள்ள பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்கள் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

கிராமத்தில் ஊரணி என்பது குடிநீர் ஆதாரத்தின் வேராகும். ஊரணியை தூய்மையாக வைத்துக் கொள்வது ஊராட்சி நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும்.

இதற்கு எதிர்மறையாக நல்லம்மாள் கோயில் தெரு அங்கன்வாடி அருகே ஊரணியும், பெருமாள் கோயில் ஊரணியும் சாக்கடைகளின் சங்கமமாக உள்ளது.

இதனால் கொசு தொல்லை அதிகரித்து மக்களை பாடாய்படுத்துகிறது.

குடிநீர் விலைக்கு வாங்கும் அவலம்


மீனா: சருத்துபட்டியில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படும் நீர் உவர்ப்பு நீராக உள்ளது. குடிநீரில் காலை 8:00 மணிக்கு சாதம் தயாரித்தால் மதியம் 1:00 மணிக்கு சாதம் நொந்துபோகிறது.

எனவே, பெரியகுளம் பகுதியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.17 க்கு வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

பஸ் ஸ்டாப்பிலிருந்து ஊருக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. ரோடு சீரமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார வளாகம் திறக்க வேண்டும்


வனிதா, சருத்துப்பட்டி: ஆறாவது வார்டில் ஆண்கள், பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இவை முறையான பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி முடங்கியுள்ளது. இதனால் பெண்கள் இயற்கை உபாதைக்கு சிரமம் அடைகின்றனர். பயன்பாடு இல்லாத சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

கிடப்பில் ரேஷன் கடை பணி


மனோஜ், சருத்துப்பட்டி: நல்லம்மாள் கோயில் தெருவில் ரேஷன் கடை கட்டுமான பணி எட்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது.

என்ன காரணத்தினாலோ மூன்று மாதங்களாக பணி முடங்கியுள்ளது. இதனால் சமுதாயக்கூடத்தில் செயல்படும் ரேஷன் கடையில் பொருட்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.

விரைவில் ரேஷன் கடை பணியை நிறைவு செய்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் சேரும் கழிவுநீர் அங்கன்வாடி அருகே உள்ள ஊரணியில் சேர்ந்து கழிவுநீர் குளமாக மாறி விட்டது.

சுகாதார கேட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் நலன் பாதுகாப்பு கருதி ஊரணியை தூய்மைப்படுத்த வேண்டும்.

ரூ.5 கோடியில் வளர்ச்சி பணிகள்


சாந்தி, ஊராட்சி தலைவர்: 15வது நிதிக்குழுவிலிருந்து ஜல்லிபட்டி ரோட்டில் இருந்து கிணறு முதல் பெருமாள் கோயில் வரை ரூ.13.46 லட்சம் மதிப்பீட்டில் குழாய் அமைத்தல், ஆதிதிராவிடர் பள்ளி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டுமானப் பணிகள், வார்டுகளில் பேவர் பிளாக் கற்கள் அமைத்தது உட்பட இதுவரை ரூ.5 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.

இரு ஊரணிகளை தூய்மைப்படுத்துவதற்கு ஒன்றிய அலுவலகம் பொதுநிதியில் இருந்தும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்க கோரி கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *