ரூ.22.85 லட்சம் மோசடி : திருச்சி நிறுவன உரிமையாளர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்த திருச்சி கருமண்டபம் நட்சத்திரா நகரை சேர்ந்த பரணிதரனை 39, தேனி போலீசார் கைது செய்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர் . இவர் எஸ்.பி., சிவபிரசாத்திடம் அளித்த புகாரில் தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக ஒரு நிறுவன விளம்பரத்தை பார்த்து அங்கு விசாரித்தேன். மேலாளராக குமார் பணியாற்றினார். அவர், நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருச்சியில் உள்ளது.
கருமண்டபம் நட்சத்திர நகரை சேர்ந்த மணிமாறன் மகன்கள் குருஈஸ்வர், பரணிதரன் நிறுவனத்தை நடத்துவதாக தெரிவித்தனர். அவர்கள் ரூ.8.20 லட்சம் கொடுத்தால் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஜெரோம் 39, என்ற டிராவல்ஸ் உரிமையாளர் மூலம் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினர். அதை நம்பி வங்கிக் கணக்கு மூலமாகவும்,நேரடியாகவும் ரூ.8.20 லட்சம் கொடுத்தேன். பின் நியூசிலாந்து நாட்டில் ஓட்டலில் மேற்பார்வையாளர் பணிக்கு அனுப்புவதாக கூறினர்.
ஓராண்டு ஆன பின்பும் பணிக்கு அனுப்பவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினர். இதுபோல் தேனி அரவிந்தனிடம் ரூ.5.65 லட்சம், மதுரையை சேர்ந்த மதுரைவீரனிடம் ரூ.3 லட்சம், அதே பகுதி பாலமுருகனிடம் ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். நால்வரிடம் மொத்தம் ரூ.22.85 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா ஆகியோர் டிராவல் நிறுவன உரிமையாளர் ஜெரோம், நிறுவன உரிமையாளர்கள் குருஈஸ்வர், பரணிதரன், மேலாளர் குமார் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜூலையில் ஜெரோம் கைது செய்யப்பட்டார். நேற்று போலீசார் பரணிதரனை 39, கைது செய்து தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.