சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிய மேகமலை
கம்பம்: அதிக பனிப்பொழிவு, சாரல் மழை, பனிமூட்டம் என, மாறுபட்ட சீதோஷ்ண நிலை மேகமலையில் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தேனி மாவட்டம் மேகமலையில் கண்ணுக்கு எட்டிய துாரம் தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளும், சிறிய நீர்த் தேக்கங்களும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் ரோட்டை ஒட்டியே இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கின்றனர். மகாராஜா மெட்டு, வியூ பாயிண்ட்டில் இருந்து பார்த்தால் கம்பம், சின்னமனுார், சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதிகள் தெரியும்.
தொடர்ந்து பெய்து வந்த மழை நின்று, கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு ஆரம்பமானது. பிற்பகல் முதல் சாரல் மழை பெய்ய துவங்கி பனிப்பொழிவுடன் கூடிய சாரல் மழை, கடுங் குளிர், பனிமூட்டம் என சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறுபடுவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். வாகனங்களில் மஞ்சள் விளக்கை எரியவிட்டு செல்வதும் தொடர்கிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரம் தான் பனிப்பொழிவு துவங்கியது. இந்தாண்டு ஜனவரி முதல் வாரத்தில் காலதாமதமாக பனிப்பொழிவு ஆரம்பமானது. ஆனாலும் பனிப்பொழிவு, மழை, கடுங்குளிர் என மாறி மாறி சீதோஷ்ண நிலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி மேகமலைப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.