Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல் வடுகபட்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

வடுகபட்டி பேரூராட்சி அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாக, சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடுகபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் நடேசன் (தி.மு.க.,), தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அழகர் (காங்), செயல்அலுவலர் உமாசுந்தரி முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

சிவா (தி.மு.க.,): மழைகாலத்தில் ‘டெங்கு’ பரவாமல் தடுக்க அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தி, நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்.

அழகர் (காங்): 9 வது வார்டில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் பத்திரகாளியம்மன் கோயில் தெரு விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு, பார்வையாளர்கள் அமர ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்ட நிலையில் திடீரென ஏன் ரத்து செய்யப்பட்டது.

செயல் அலுவலர்: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப் பணிகளுக்கு ஒப்புதல் கிடையாது.

விமலா (சுயே.,): வார்டு எண் 4ல், பெரியகுளம் ஒன்றியம் அலுவலகம் அருகே ஆண்கள் சுகாதார வளாகத்தை வெள்ளைப் பூண்டு வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் கோப்பை சேதமடைந்து தண்ணீர் வருவதில்லை.

தலைவர்: சுகாதார வளாகம் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்வி: சேடபட்டி பகுதியில் குழாய் பழுது காரணமாக பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் இன்றி உள்ளது, சீரமைக்க வேண்டும்.

வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு சிறப்பு தீர்மானம் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *