நகராட்சி துாய்மை பணியாளர்கள் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் 2ம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகரின் சுகாதாரப் பணிக்காக சங்கர் தனியார் நிறுவனம் மேற்பார்வையில் 79 தற்காலிக பணியாளர்கள் பணி செய்கின்றனர்.
தினமும் 13 டன் குப்பை சேகரிப்பு கணக்கிட்டு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.1.60 கோடி வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனம் சுகாதார பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு கணக்கு பிடித்தம் போக தினமும் ரூ.440 சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தற்போது பிப்ரவரி மாதம் சம்பளம் மார்ச் 8 வரை வழங்கவில்லை.
இதனால் தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் மார்ச் 8 வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். நேற்று பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் ஏற்படும் என்ற நிலையில், ஒப்பந்ததாரர் நேற்று 2 ம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இன்று 3ம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். சம்பளம் கொடுக்க முரண்டு பிடிக்கும் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, குறைந்த லாபத்துடன் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய வேண்டும்.