தொடரும் கனமழை 3 மணி நேர மின்தடையால் அவதி
மாவட்டத்தில் இரு நாட்கள் பெய்து வரும் கனமழையால் தேனியில் நேற்று முன்தினம் இரவு 3 மணிநேரம் மின் தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தேனி, பழனிசெட்டிபட்டியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு கொட்டக்குடி பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் மின் ஒயரில் விழுந்து மின் தடை ஏற்பட்டது. தனியார் மண்டம் எதிரே மின் ஒயர் அறுந்து. தேனி திட்டச்சாலையில் 2 மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தது. இதனால் நகர் பகுதியில் இரவு 8:00 மணி முதல் 11:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சீரமைப்பிற்கு பின் மின் வினியோகம் ஏற்பட்டது.
ஏழு வீடுகள் சேதம்
அக்.22ல் பெய்த கனமழையால் ஆண்டிபட்டி மாரியம்மன் கோயில் தெரு பஞ்சவர்ணம், மேற்குத்தெரு புஷ்பா தகர வீடுகள் சேதமடைந்தன. பெரியகுளம் மேல்மங்கலம் மேலத்தெரு வடிவேல்முருகன், தேவதானப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டி ரோடு தெற்குத்தெரு நாச்சியம்மாள் ஆகியோரின் ஓட்டு வீடு சேதமடைந்தன. போடி உப்புக்கோட்டை போடேந்திரபுரம் இந்திராகாலனி முத்துபேச்சியின் தொகுப்பு கான்கிரீட் வீடு சேதமடைந்துள்ளது.
பெரியகுளம் தாமரைக்குளம் அம்பேத்கர் தெரு முனியம்மாள், அதேப்பகுதி சஞ்சய்காந்தி தெரு முருகபாண்டி ஆகியோரின் ஏழு வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை தாசில்தார்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மழையளவு விபரம்
நேற்றுமுன்தினம் தேக்கடியில் 52.0 மி.மீ., மழை பெய்தது. பெரியகுளத்தில் 42.0 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 26.6 மி.மீ., வீரபாண்டியில் 10.2 மி.மீ., வைகை அணையில் 14.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 13.4 மி.மீ., மிகக்குறைந்த அளவாக சண்முகாநதியில் 3.6 மி.மீ.,, பெரியார் அணையில் 1.0 மி.மீ., ஆண்டிபட்டியில் 2.0.மி.மீ., என பதிவாகியுள்ளது.