திருவிழாக்களில் ‘சிசிடிவி’ அமைக்க எஸ்.பி., உத்தரவு
கோயில் திருவிழாக்களின் போது குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க எஸ்.பி., சிவபிரசாத் உத்தவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் அதிக அளவில் கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் மக்களுடன் வெளியூர் உறவினர்கள் இணைந்து திருவிழா கொண்டாடுகின்றனர். திருவிழாவில் இரவில் நாடகம், இசைக் கச்சேரி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
இதனை காண வரும் சிலர் பிரச்னைகளில் ஈடுபட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதில் வெளியூரில் இருந்து வந்து பிரச்னையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவியது.
இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நகரம், கிராமங்களில் நடக்கும் திருவிழா பகுதிகளில் விழா குழுவினர் தற்காலிக கேமராக்கள் வைக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு திருவிழா அனுமதி வழங்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதி கிராமத்திற்குள் வரும் பாதைகளில் கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் கூறுகையில், ‘கேமராக்கள் அமைப்பதன் மூலம் பிரச்னை செய்பவர்களை எளிதில் கண்டறியலாம். பிரச்னையில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க இயலும்,’ என்றனர்.