கால்நடை கணக்கெடுப்பு பணி நாளை துவக்கம்
மாவட்டத்தில் 21வது கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிகள் நாளை அக்.25ல் துவங்கப்பட உள்ளது,’ என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுக்கும் பணிகள் கால்நடை பராமரிப்புத்துறையினரால் நடத்தப்படும்.
மாவட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ள 126 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 31 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக, களப்பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இப்பணிகள் வருவாய் கிராம வாரியாகவும், நகரப் பகுதியில் வார்டு வாரியாகவும் நடக்க உள்ளன.
இப்பணியின் மூலம் கிராம, நகரப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடு, மலைமாடு, கோழி, நாய், பூனை, வாத்து, வான்கோழி, புறா உள்ளிட்ட 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும். இந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கு எடுத்தால்தான் கால்நடை பராமரிப்பில் எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல், கண்காணிக்கும் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். கால்நடை மருந்துகள் உற்பத்தி தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க இந்த எண்ணிக்கை அவசியம்.
மேலும் மக்களுக்கு தேவையான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணை, நெய், ஆடு உட்பட பிற இறைச்சிகள், முட்டை போன்றவற்றை வழங்க
முடியும். இதனால் கணக்கெடுப்பாளர்களுக்கு கால்நடை வளர்ப்போர், பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்து, தேவையான விபரங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.