Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மேகமலையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சாரலுடன் பனி மூட்டம்

கம்பம்: மேகமலை மலைக்கிராமங்களில் சாரல் மழையும், பனி மூட்டமும் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடத்தை பிடிக்கிறது. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். மூணாறு சீதோஷ்ண நிலை போல் இருக்கும்.

நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர், அதிகபட்ச பனிப்பொழிவு இருக்கும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் புயல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் வரை மலை ரோட்டில் பனிமூட்டம் நிரம்பி உள்ளது. அத்துடன் சாரல் மழையும் பெய்து வருகிறது இரவு 9:00மணிக்கு மேல் ஆரம்பமாகி மறுநாள் காலை 10:00 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.

இப்பகுதியில் மாலை 5:00 மணிக்கு பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் பிரச்னை இல்லை. ஆனால் காலையில் 7 மணிக்கு பின் போக்குவரத்து துவங்கி விடும். அப்போது வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

தொடர்ந்து மணலாறு இரவங்கலாறு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதுமே பனிப்பொழிவு காணப்படுகிறது.

எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பனிப்பொழிவு இருப்பதால், மேகமலை பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *