Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை

”மாணவர்கள் அலைபேசியில் நேரத்தை வீணடிக்காமல் நேர மேலாண்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் வாழ்வில் உயரலாம்,” என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

 

கொடைக்கானல் சங்கராவித்யாலயா மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:

அலைபேசியில் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், நேர மேலாண்மையை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். பெரிய அளவில் கனவு காண வேண்டும்.

அதை மெய்ப்பிக்க தேவையான உந்து சக்திகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு சுய ஒழுக்கம் வேண்டும். அதிகாலையில் படிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். உழைப்பின்றி உயர்வு அமைவதில்லை. என் வெற்றிக்கு பின்னால், என் தாயின் உந்து சக்தி, அறிவுரை அமைந்து உள்ளது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், பசு மாடு வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் கவனத்தை செலுத்தி, இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ளேன்.

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் யோகாவில் குறைந்தது ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும்.

கடின உழைப்பே வெற்றிக்கு காரணமாக அமையும். கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை வாழ்வியலோடு ஒன்றிணைத்து விளையாட்டு போக்குடன் அணுக வேண்டும். தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு எழுச்சி அடைய வேண்டும்.

சரஸ்வதியை வணங்கி படிப்பை துவங்க வேண்டும். சிறு குடும்பத்தில் பிறந்த நான் இந்த உயர் நிலையை அடைந்தது, என் குடும்ப அறிவுரையும், சரியான திட்டமிட்ட நேர மேலாண்மையை கடைப்பிடித்ததே ஆகும். தோல்வியை தோல்வியடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *