கந்த சஷ்டி கட்டணம் 1000 ரூபாய்?
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டியின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. கூட்டம் அதிகமான நாட்களில் கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது.கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக நபருக்கு ரூ.1000, விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2000, அபிேஷக தரிசன கட்டணம் நபருக்கு ரூ.3000 வசூலிக்க 2018ல் அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அதை அமல்படுத்தவில்லை. 2023 ல் கந்த சஷ்டியின் போது அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. எதிராக பக்தர்கள் போராடினர். கட்டண உயர்வை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.2024 கந்த சஷ்டியின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணம் நபருக்கு ரூ.1000 வசூலிக்க உள்ளதாக செப்.18 ல் கோயில் அலுவலக சுவற்றில் அறிவிப்பு இடம்பெற்றது. இதில் தக்கார் கையொப்பம் இல்லை. பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவிப்பு வெளியிடவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்தது.கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதற்காக 2018 ல் வெளியான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க திருப்பதி கோயிலில் உள்ளதுபோல் ஆதார் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு முன் கூட்டியே இணையதளம் மூலம் டோக்கன் வழங்க வேண்டும். தரிசன டோக்கன் வழங்க தனி கவுன்டர்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.7 க்கு ஒத்திவைத்தது.