தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறார் ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம், தைலாபுரத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 600 மனமகிழ் மன்றங்கள் தமிழகம் முழுதும் திறக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போல், மனமகிழ் மன்றத்தில் அனைத்து மது வகைகளும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 900 மனமகிழ் மன்றங்களும், தற்போது தி.மு.க., ஆட்சியில் 600 என, மொத்தம் 1,500 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை.
கடந்த தீபாவளிக்கு, 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் கூடுதலாக விற்க இலக்கு நிர்ணயிக்க, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னும் – பின்னும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில், 39 மக்களவை தொகுதிகள் 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து, மத்திய அரசிடம் தான் போராடவேண்டும். அதைவிடுத்து, மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது தவறு. இப்போதே, அரசால் தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை.
ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 தமிழர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.