தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை களம் இறங்குமா:ஆண்டிபட்டியில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
ஆண்டிபட்டி: – பருவநிலை மாற்றத்தால் ஆண்டிபட்டி பகுதியில் சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல், ‘அம்மைக்கட்டு’ எனும் பொன்னுக்கு வீங்கி வைரஸ் நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கை இன்றி சுகாதாரத்துறை மவுனம் காத்து வருகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் சுட்டெரித்த வெயில், பலத்த காற்று முடிந்த பின் ஒரு மாதமாக அடுத்தடுத்து பெய்யும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. அடிக்கடி வீசும் குளிர்காற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, தொடர் இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு,தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் 700 பேர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்கு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தரமற்ற குடிநீர், கொசுக்கள் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்படுத்தவில்லை.
ஓட்டல்கள், டீக்கடைகள், ரோட்டோர கடைகளில் நிலவும் சுகாதார பாதிப்புகள் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. அவசர காலங்களில் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை தற்போது மவுனமாக உள்ளது.
முடங்கிய சுகாதார துறை
தாய் சேய் நலம், அவசரகால மருத்துவ உதவிகளுக்காக ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டி.சுப்புலாபுரம், தர்மத்துப்பட்டி, எம்.சுப்புலாபுரம், ராஜதானி ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
இங்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. மாற்றுப் பணியாக டாக்டர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். நடமாடும் மருத்துவ குழுவில் உள்ள டாக்டர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதால் அதன் செயல்பாடுகளும் பாதிக்கிறது. துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் நிரந்தரமாக அங்கு தங்கி பணி புரிவதில்லை. பல நேரங்களில் பூட்டியே உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் பாதிப்புக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவ சிகிச்சை, ஆலோசனை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பருவநிலை மாற்ற பாதிப்பு இன்னும் சில மாதங்கள் தொடரும் வாய்ப்பே உள்ளது. எனவே, சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட வேண்டும். சுகாதாரத் துறையில் நிலவும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவும், சீசன் காலத்தில் ஏற்படும் நோய் தாக்கத்திற்கு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.