மருத்துவ குணம் வாய்ந்த பெர்சிமன் பழங்கள் விற்பனைக்கு ‘
போடி : போடியில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகையான பெர்சிமன் பழங்கள் சீசன் துவங்கி உள்ள நிலையில் கிலோ ரூ.300 க்கு விற்பனையானது.
இப்பழங்கள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை. அங்கிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கு நாற்றுங்கள் கொண்டு வரப்பட்டு, தற்போது மரங்களாக வளர்க்கப்பட்டு பராமரித்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சீசனுக்கு உரிய காலமாகும்.
இதன் காய் பச்சையாகவும், பழமாக மாறியவுடன் ஆரஞ்சு கலந்த இளம் சிவப்பு நிறத்தில் தக்காளி போல காணப்படும்.
புளிப்பு, இனிப்பு கலந்த சதை பிடிப்புடன் இருக்கும். பழம் அழுகல், வெடிப்பு ஏற்படாது. பறித்தாலும் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சாகுபடியாகும். தற்போது சீசன் துவங்கிய நிலையில் விற்பனைக்காக போடிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து விற்பனை செய்கின்றனர். அனைவரும் சாப்பிடக் கூடிய இப்பழத்தை மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை கொள்முதல் செய்து, சில்லறையில் கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்கின்றனர்.
பழம் அரிதாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.