Saturday, April 26, 2025
Uncategorized

சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்:ரூ.427 கோடியில் அமைக்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம்திறக்கப்படும்

சென்னை: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படும், என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு 90 சதவீத அரசு பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன. இசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூரு செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்குகிறது. இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத்து.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காக சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  இந்த பேருந்து நிலையம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:

குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடியில் 25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்த முடியும். மாநகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழி உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்தம், 41 கடைகள், 8 டிக்கெட் கவுன்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள் மற்றும் 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன், மாநிலத்தின் முதல் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதி இருக்கும்.

இப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என இருங்காட்டுக்கோட்டை, திருமழிசை பகுதிவாசிகள் மற்றும் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *