ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல் -கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல்
கூடலுார்; கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின்பஜார் கடைகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையம், ரைஸ் மில், மருந்துகடைகள், வங்கிகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம். காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் இப்பகுதியில் அதிகமாக கடந்து செல்கின்றன.
வரைமுறையின்றி டூவீலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பள்ளி வாகனங்கள் திருப்ப முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. 30 அடி அகலம் உள்ள ரோடாக இருந்த மெயின் பஜார் தற்போது 10 அடி அகலம் மட்டுமே உள்ளது.
அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நடந்த செல்ல நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.