1.30 லட்சம் பேர் பயன்:பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில்மாநகராட்சி தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட 2,433 சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,30,862 பேர் பயனடைந்துள்ளனர், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவண்ணம் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவண்ணம், கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நேற்று வரை 2,433 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,30,862 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மலேரியா பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கொசுப்புழு வளரிடங்களான, மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவை) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழித்திடும் பணி மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளாக கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல், டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களால் பரவும் நோய்த்தடுப்பு பணிக்காக நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் என 3,368 களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 319 மருந்து தெளிப்பான்கள், 54 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 156 ஸ்பிரேயர்கள், கையினால் இயக்கப்படும் 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.