இளநிலை உதவியாளரின் விழிப்புணர்வு முயற்சி ‘தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் தினமும் ஒரு திருக்குறள், விளக்கம்
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக ‘தினமும் ஒரு திருக்குறள்’எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அலுவலக இளநிலை உதவியாளர் பிரித்திகா ஈடுபட்டு வருகிறார்.
இம்மருத்துவக் கல்லுாரியின் ‘டீன்’ அலுவலக நுழைவாயில் அறையில் திருவள்ளுவர் படத்துடன் கூடிய போர்டு உள்ளது. இதில் 2 ஆண்டுகளாக இளநிலை உதவியாளர் பிரித்திகா தினமும் ஒரு திருக்குறள், அதன்அர்த்தத்தையும் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவர் கூறியதாவது: தமிழ் இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளேன். பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளாக முதல்வர் முத்துசித்ரா, மருத்துவமனை நிர்வாக அலுவலர் கணேஷ்பாண்டி வழிகாட்டுதலில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தினமும் ஒரு குறள் என எழுதி, அதன் விளக்கத்தையும் எழுதி வருகிறேன். அனைவரும் தினமும் ஒரு குறள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதுகிறேன். இதற்கு பலரும் வரவேற்பு அளிக்கின்றனர். அலுவலகம் வரும் பிரமுகர்கள், நோயாளிகளின் உறவினர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் போர்டு அருகே நின்று ‘செல்பி’ எடுத்துச் செல்கின்றனர். இக் கல்லுாரியில் படிக்கும் பிற மாநில மாணவர்கள் திருக்குறளுக்கான அர்த்தம் கேட்டுச் செல்கின்றனர். உலக பொதுமறையான் திருக்குறள் நுாலில் உள்ள 1330 குறள்களும் மதச்சார்பற்ற வாழ்வியல் நெறிமுறைகளை வழங்குகிறது என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார்.