தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் :முருங்கையில் தேயிலை கொசு கட்டுப்படுத்த ஆலோசனை;
தேனி; மாவட்டத்தில் தேயிலை கொசுக்களால் முருங்கை சாகுபடி பாதிக்கப்படுகறிது. இந்த தேயிலை கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளனர்.
தேனி, கடமலைக்குண்டு, ஆண்டிபட்டி, ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் முருங்கை சாகுபடியாகிறது. சுமார் 2900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வளையபட்டி, கருமுருங்கை, பி.கே.எம்., 1 ஆகிய ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் சமையலுக்கு பயன்படுதவதாலும், மருத்துவ குணம் வாயந்துள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. விவசாயிகளும் அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது முருங்கையில் தேயிலை கொசுப்பூச்சிகள் தாக்கி, மரத்தை வாடச்செய்கின்றன. இதனால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவது பற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது: பாதிக்கப்பட்ட இலைகளை கவாத்து செய்ய வேண்டும். அருகில் வேம்பு, கொய்யா, முந்திரி மரங்கள் பயிரிடக்கூடாது.
உயிர் பூஞ்சான பூச்சிக்கொல்லி மருந்தான பியூவேரியா பேசியானா மருந்தை 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து தெளிக்கலாம்.
ஒருலிட்டர் தண்ணீரில் பூச்சி கொல்லி மருந்துகளான குலோதியாநிடின் 0.2 கிராம் அல்லது தையாக்குளோப்ரிட் 0.2 மி.லி., அல்லது தையாமீத்தாக்சோன் 0.2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி முருங்கையை தாக்கும் தேயிலை கொசுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். என்றார்.