சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை இன்றி கொடிகளில் தேக்கம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் சிக்கல்
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சீதோஷ்ண நிலை மாற்றம், கொள்முதலுக்கு வியாபாரிகள் வராததால் திராட்சை பழங்கள் அறுவடை செய்யாமல் கொடிகளில் தேங்கியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி , கருநாக்க முத்தன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. சில வாரங்களாகவே சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில், மேகமூட்டம் மாறி, மாறி காணப்படுகிறது. சூரிய வெளிச்சம் இன்றி பகலில் மேகமூட்டம், லேசான பனிப்பொழிவு , சாரல், குளிர் என காற்றின் ஈரப்பதம் அதிகளவு உள்ளது. இந்த சீதோஷ்ண நிலை திராட்சைக்கு உகந்ததல்ல. இதனால் அடிச்சாம்பல், செவட்டை நோய் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க விவசாயிகள் பூச்சி கொல்லி மருத்துகளை ஸ்பிரே செய்கின்றனர்.
மற்றொரு புறம் பொதுமக்கள் நுகர்வு குறைவால் வியாபாரிகள் கொள்முதல் செய்வது குறைந்து, விற்பனை மந்தமாக உள்ளது. தயார் நிலையில் உள்ள பழங்களை அறுவடை செய்யாமல் கொடிகளில் விட்டுள்ளனர்.
பல தோட்டங்களில் பழங்கள் தேங்கி உள்ளது. 130 நாட்களுக்கு மேல் இருந்தால் பழங்களின் நிறம், தரம் குறைந்து விடும். நோய் தாக்குதலால் மருந்து அடிக்கும் செலவு, கொள்முதலுக்கு வராததால் அறுவடை இன்றி தேங்கியுள்ளதால் இடியாப்ப சிக்கலில் விவசாயிகள் சிக்கி உள்ளனர். வேறு வழியின்றி திராட்சை விவசாயிகள், ஆனைமலையன்பட்டி ஒயின் தொழிற்சாலையை அணுகியும் இதுவரை கொள்முதலுக்கு வரவில்லை.
சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன்,’ சீதோஷ்ண நிலை மாற்றம், அறுவடையின்றி கொடிகளில் தேக்கம், நோய் தாக்குதலால் மருந்து தெளிக்கும் நிலையில் ஒயின் தொழிற்சாலை கொள்முதல் செய்ய கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்த வேண்டும். அல்லது வேறு ஒயின் தொழிற்சாலைகளுக்காவது கொள்முதல் செய்ய வழிகாட்ட வேண்டும், திராட்சை விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.