காலையிலேயே களமிறங்கும் பணியாளர்கள் ‘வரி வசூலில் நகராட்சிகள் தீவிரம்
நகராட்சிகளில் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி, குத்தகை இனங்களுக்கான வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரி இனங்கள் மூலம் நிர்வாகம் நடத்தப்படுகிறது.
பணியாளர் சம்பளம், மின்கட்டணம், குடிநீர் பராமரிப்பு, வளர்ச்சி பணிகள் என அனைத்தும் இந்த வரிகளை நம்பியே உள்ளது. வரி இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ம் தேதிக்குள் கட்டிக் கொள்ளலாம்.
பணியாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி அல்லது ஜனவரியில் வரி வசூல் துவக்குவார்கள்.
இந்தாண்டு அரசு உத்தரவை சுட்டிக்காட்டி வரி வசூலை நவம்பர் முதல் வாரமே துவக்கி விட்டனர்.
நகராட்சிகளில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பல குழுக்களாக பிரிந்து வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். காலை 8:00 மணிக்கே இந்த பணியை துவங்கி இரவு 8:00 மணி வரை வசூலிக்க வாய் மொழியாக கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜனவரியில் தானே வருவீர்கள். இந்தாண்டு ஏன் நவம்பரில் வரி கேட்கிறீர்கள் என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். 2025 மார்ச் வரை கால அவகாசம் உள்ளபோது ஏன் விரட்டுகிறீர்கள் என புலம்பி வருகின்றனர். வரி வசூலில் அதிகாரிகள் காட்டும் கெடுபிடி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.