சபரிமலை, பழனி சீசன் துவங்கியும் கலர் வேஷ்டி விற்பனை மந்த நிலை
ஆண்டிபட்டி: சபரிமலை, பழனி பாதயாத்திரை பக்தர்கள் விரதம் துவக்கியுள்ள நிலையில் கலர் வேஷ்டிகள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் சக்கம்பட்டி கலர் வேஷ்டி உற்பத்தியாளர்கள்,வியாபாரிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாரம்பரியமாக சக்கம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, சேலைகளுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு இருந்தது.
தொழில் போட்டியால் கைத்தறி தொழில் நசிந்து தற்போது விசைத்தறிகளில் மட்டும் ஜவுளி உற்பத்தி தொடர்கிறது. சக்கம்பட்டியில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரக்கணக்கான கலர் வேஷ்டிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வாரம் ஒரு முறை விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
வியாபாரிகள் நேரில் வந்து உற்பத்தி மையங்களில் கொள்முதல் செய்தும் செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கலர் வேஷ்டிகள் உற்பத்தியில் இருந்தாலும் சபரிமலை, பழனி பாதயாத்திரை சீசன் துவங்கும் கார்த்திகை, மார்கழியை கணக்கிட்டு முன்கூட்டியே ஆயிரக்கணக்கான வேஷ்டிகள் உற்பத்தி செய்து இருப்பில் வைத்து விடுவர். இந்த ஆண்டும் கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் கலர் வேஷ்டிகள் முன்கூட்டியே உற்பத்தி செய்து விற்பனைக்காக வைத்தனர். கார்த்திகை மாதம் துவங்கி தற்போது 13 நாட்களை கடந்துள்ளது. சபரிமலை சீசனுக்கு தேவையான கருப்பு வேஷ்டிகள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் தற்போது பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு தேவையான காவி, பச்சை, மஞ்சள் கலர் வேஷ்டிகளை உற்பத்தி செய்யும் பணிகளில் உள்ளனர். விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலையால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகளிடம் தொழில் ஆர்வம் குறைந்துள்ளது
வியபாராத்தில் நிலவும் கடும் போட்டி
ஜவுளி உற்பத்தியாளர்கள்,வியாபாரிகள் கூறியதாவது:
சக்கம்பட்டியில் கடந்த காலங்களில் தினமும் 5000க்கும் அதிகமான கலர் வேஷ்டிகள் உற்பத்தியாகும். தற்போது 26 x 26, 30 x 30 நூல்களால் 4 முழம் கலர் வேஷ்டிகள் குறைந்த எண்ணிக்கையிலான தறிகளில் மட்டும் உற்பத்தியாகிறது. தினமும் ஆயிரம் முதல் 2000 வேஷ்டிகள் வரை உற்பத்தி ஆகிறது. உற்பத்தி செலவு அதிகம் ஆகிறது. ஆனால் விலையை உயர்த்தி விற்க முடியவில்லை. ஈரோடு, குமாரபாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கலர் வேஷ்டிகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால் கடுமையான போட்டி நிலவுகிறது. கருப்பு வேஷ்டிகள் விற்பனை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் உற்பத்தியிலும் ஆர்வமில்லை. பழனி பாதயாத்திரை சீசன் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காவி வேஷ்டிகள் துண்டுகள் உற்பத்தி விற்பனை தொடர்கிறது இவ்வாறு கூறினர்.