பள்ளி வேனை மறித்த யானை
மூணாறு: மூணாறு அருகே ரோட்டில் பாய்ந்து வந்த படையப்பா பள்ளி வேனை வழி மறித்ததால் மாணவ, மாணவிகள் அச்சத்தில் அலறினர்.
மூணாறு அருகே கொரண்டிக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நெற்றிமேடு, குட்டியாறுவாலி இடையே குறுகலான ரோட்டில் வேன் சென்றபோது பிரபல படையப்பா ஆண் காட்டு யானை ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த டிரைவர் யானையை கடந்து விடலாம் என எண்ணி ஓட்டியபோது வேனை நோக்கி பாய்ந்து வந்து துதிக்கையால் முன்புற கண்ணாடியை துளாவியது. அதனை பார்த்து வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அச்சத்தில் பலமாக அலறினர். இதனிடையே சுதாரித்து கொண்ட டிரைவர் வேனை பின் நோக்கி நகர்த்தி வெகு தூரம் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. யானை காட்டிற்குள் சென்ற பிறகு மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர். பள்ளி வேனின் பின்னால் டூவீலரில் சென்றவர்களும் யானை பார்த்து திரும்பி உயிர் தப்பினர். அச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.