குடிநீர் மாசுபடுவதால் நோய் பரவும் அபாயம் ‘ நீர்வழிப் பாதையில் கொட்டப்படும் கழிவுகள்… தடுக்கப்படுமா;
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் நீர்வழிப் பாதைகளில் கொட்டப்படும் குப்பை, பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகளால் நீர் நிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு தண்ணீர் மாசுபடுகிறது. இவற்றை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தாலுகாவில் வராகநதி, பாம்பாறு மற்றும் 30 க்கும் அதிகமான கண்மாய்கள், நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், மண்ணில் மக்காமல் நீர் வரத்து பாதைகளை மறித்து தேங்குயுள்ளன. இதனால் காலப்போக்கில் நீர் வரத்து பாதை சுருங்குகிறது. பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி வழியாக மஞ்சளாறு அணை நீர் வரத்து வாய்க்கால் வழியாக சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சிகள் பயன்பெறும் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.
பாழாகும் வராகநதி
வராகநதியில் இறைச்சி கழிவுகள் மற்றும் சுதந்திர வீதி பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பை கொட்டுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வராகநதியில் இருந்து பெரியகுளம் நகராட்சி, தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி பேரூராட்சிகள், கீழ வடகரை, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, குள்ளப்புரம் உட்பட 10க்கும் அதிகமான ஊராட்சிகளுக்கு உறைகிணறு வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முக்கியத்துவமான நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டிய நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்களோ கண்டு கொள்வதில்லை. இதனால் குடிநீர் மாசுபட்டு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.–