பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறல் : தேனி – வலையபட்டிக்கு அரசு பஸ் இயக்காததால் மாணவர்கள் அவதி
தேனி: தேனி -வளையபட்டிக்கு அரசு பஸ் இயக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ் இயக்க கோரி பொது மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் 313 மனுக்கள் வழங்கினார்.
பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் பெருமாள்சாமி, ராகவன் தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், லட்சுமிபுரம் படேல்தெரு, நேதாஜி தெருவில் பாதை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர்.
பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரினர்.
தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சி, சவளப்பட்டி பொதுமக்கள் வழங்கிய மனுவில், ‘நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சாக்கடை அமைத்துள்ளனர். ஆனால், கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் நோய் பாதிப்பிற்கு ஆளாகுகின்றனர்.
ஊராட்சியில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. சாக்கடை கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது.
பூதிப்புரம் கெப்புரெங்கன்பட்டி கிராம வனகுழு தலைவர் முருகன் பொதுமக்கள் சார்பில் வழங்கிய மனுவில், ‘பூதிப்புரம் பேரூராட்சி, மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்டு 6 கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் படிப்பு, வேலைக்காக பலர் தினமும் தேனி செல்கின்றனர்.
ஆனால் இப்பகுதிக்கு தேனியில் இருந்து அரசு பஸ் இயக்காததால் பலர் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். வலையபட்டி வரை அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.
பெரியகுளம் தாலுகா, பொம்மிநாயக்கன்பட்டி தக்வாஜீம்ஆ பள்ளிவாசல், இப்ராஹிம் அரபிக் கல்லுாரி தலைவர் முகமது இப்ராஹிம் வழங்கிய மனுவில், ‘இப்பகுதியில் அரசு ஒதுக்கிய நிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கான அடக்கஸ்தலம், சுற்றுசுவர் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.