Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

அனுமதியில்லை பள்ளி, கல்லுாரி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு நகராட்சிகளில் பகலில் 4 மணிநேரம் செல்லலாம்

தேனி: மாவட்டத்தி பள்ளி, கல்லுாரி நேரங்களில் டிப்பர் லாரி, கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை (4 மணி நேரம் மட்டும்) உள்ளூரில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான போக்கவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை தொடர்ந்து வெளி மாநில,மாவட்டங்களில் இருந்து தேனி வழியாக பக்தர்கள் வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றனர். ஆறு நகராட்சி பகுதிகளில் காலை, மாலை என பள்ளிக் கல்லுாரி நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் டிராபிக் போலீசார் சிரமத்தை சந்திக்கின்றனர். டிப்பர் லாரி மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. போக்குவரத்து போலீசார் பரிந்துரையில் எஸ்.பி., சிவபிரசாத் போக்குவரத்து மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். நகரின் முக்கிய பகுதிகளில் இதுபற்றிய அறிவிப்பு போர்டுகள் வைத்துள்ளனர்.

எஸ்.பி., கூறியிருப்பதாவது: மதுரை ரோட்டில் வரும் கனரக வாகனங்கள் அரண்மனைப்புதுார் விலக்கு, கொடுவிலார்பட்டி, வயல்பட்டி, வீரபாண்டி பைபாஸ் ரோட்டை அடைந்தும், அல்லது நாகலாபுரம், தப்புக்குண்டு சென்று, அங்கிருந்து உப்பார்பட்டி பிரிவில் பைபாஸ் ரோடு வழியாக கேரளா செல்ல வேண்டும். கேரளா, கம்பம், போடியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் தேனி நகருக்குள் வராமல், அன்னஞ்சி பைபாஸ் சென்று, புது பஸ் ஸ்டாண்ட் வழியாக மதுரை செல்ல வேண்டும். மிக முக்கியமாக பள்ளிக் கல்லுாரி நேரங்களில் டிப்பர் லாரிகள், கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நகருக்கு நுழைய அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை (4 மணி நேரம் மட்டுமே) நகருக்குள் இயங்க போலீஸ் அனுமதியுடன் இயக்க வேண்டும். விதிமீறனால் வாகனம், தளவாடப் பொருட்கள் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை ஆறு நகராட்சிகளில் உள்ள போக்குவரத்து போலீசார் கண்காணித்து, சீரான போக்குவரத்து நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இரவு 9:00 முதல் காலை 6:00 வரை நகர் பகுதியில் வாகனங்கள் சென்று வர தடையில்லை என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *