மந்தைக்குளத்தில் மழை நீரை முழுவதும் தேக்க இயலாத நிலைநீர் வரத்து ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்
போடி: போடி அம்மாபட்டி மந்தைக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பால் முழுமையாக மழைநீரை தேக்க முடியாத நிலை உள்ளது. நீர் வரத்து பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது மந்தைகுளம் கண்மாய்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கழுகுமலை பகுதியில் பெய்யும் மழை நீர் ஊத்தோடை, சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை வழியாக இக் கண்மாய்க்கு நீர் வரும்.
கண்மாய் நீரினால் 500 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கர் மறைமுகமாக பயன்பெற கிணறுகளுக்கு ஊற்று நீர் கிடைக்கும்.
துவக்கத்தில் சுத்த கங்கை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததன் மூலம் சில்லமரத்துபட்டி, அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது.
தற்போது சுத்த கங்கை ஓடை, ஊத்தோடை பகுதியில் இருந்து கண்மாய்க்கு வரும் பாதையின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். 100 அடி அகலம் உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் குறுகி, ஊத்தோடை இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.
சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி பெருமாள்கவுன்பட்டி பகுதிகளுக்கு நீர்வரத்து வருவது இல்லை.
விவசாய நிலங்களில் நீரை தேக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயராத நிலை உள்ளது. கண்மாய் தூர்வாரி 25 ஆண்டுகளுக்கு மேலானதால் முட்செடிகளால் சூழ்த்துள்ளது.
இதனால் மழை காலங்களில் கூட நீரை கண்மாயில் முழுமையாக தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பால் மறைந்த நீர்வரத்து ஓடை
தர்மர், விவசாயி, அம்மாபட்டி: மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அம்மாபட்டி மந்தைகுளம் கண்மாய் வரை மழை நீர் வரும் ஊத்தோடை, சுத்த கங்கை ஓடையை ஆக்கிரமித்து சோளம், கடலை விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பால் நீர்வரத்து பாதை இருந்த தடம் தெரியாமல் உள்ளது. அதிக மழை பெய்தாலும் கண்மாயில் நீரை முழுவதும் தேக்கவும் முடியவில்லை. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம்.
ஓராண்டுக்கு முன் பெயரளவிற்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. கண்மாய்க்கு நீர் வரத்து பாதை ஆக்கிரமிப்பை அதற்ற பலமுறை விவசாயிகள் வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
கண்மாய் படித்துறை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. கண்மாயில் நீர்தேக்குவதால் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும்.
கால்நடைகள் பயன்பெறும். நீர் வரத்து பாதை ஆக்கிரமிப்புகளையும், கண்மாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, கரையை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துார்வாராததால் குப்பை கொட்டும் அவலம்
மாரிமுத்து. விவசாயி, அம்மாபட்டி: சில்லமரத்துப்பட்டி — தர்மத்துப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள முக்கோடை ஓடையில் இருந்து மந்தைக்குளம் கண்மாய் வரும் நீர்வரத்து பாதை ஆக்கிரமித்து உள்ளதால் கண்மாய் அளவு குறைந்து, முட்புதர்களாக மாறி உள்ளது. இதனால் மழை நீரை சேமிக்கவும், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர வில்லை.
கண்மாய் தூர்வராதால் மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.
குடிமராமத்து திட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.