தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த பென்னிகுவிக்
கூடலுார்; ‘இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை’, எனக்கூறிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் பல்வேறு சிரமங்களுக்கு நடுவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார்.
பென்னிகுவிக் 1841 ஜன.15ல் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பிறந்தார். முல்லையாறும், பெரியாறும் இணையும் இடத்தில் 1885ல் சர்வே பணியை முடித்து கட்டுமான பணிகளை துவக்கினார். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே எவ்வித அடிப்படை வசதியும் இன்றி பணிகள் நடந்த போது 1893ல் காலராவால் பலர் இறந்தனர். பென்னிகுவிக்குடன் பணியாற்றிய 45 ஆங்கிலேய அதிகாரிகளும் இதில் இறந்தனர். அணை கட்டுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்க முடியாது என சென்னை ராஜதானி அரசு தெரிவித்தது.
1
‘இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் புவியில் வரப்போவதில்லை’, எனக்கூறிய பென்னிகுவிக் கம்பம், பழனிசெட்டிபட்டி, நிலக்கோட்டை, போடி ஜமீன் பகுதி மக்களிடம் கட்டுமான பணிகளுக்காக பணம் வசூலித்தார்.
மேலும் லண்டனில் இருந்த ரூ.65 லட்சம் மதிப்புள்ள தன் மனைவியின் வீடு, நகை, தன் சொத்துக்களை விற்று மீண்டும் அணையை கட்டத் துவங்கினார். பணிகள் முடிவடைந்து 1895 அக்.10 மாலை 6:00 மணிக்கு சென்னை கவர்னர் லாடு வென்லாக் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் தென் தமிழகத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இதுவரை பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வைத்துள்ளது.
இவரது பிறந்த நாளான ஜன.15 பொங்கல் விழாவாக தமிழக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு அரசு தரப்பில் இருந்து வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து கூடுதல் பொங்கல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1911 மார்ச் 9ல் லண்டனில் இறந்த இவர், இன்றும் தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.