விவசாயிகள் போராட்டம் கல்குவாரிகளால் விளை நிலங்கள் பாதிப்பு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தேக்கப்பட்டி அருகே கல் குவாரிகளால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து விவசாயிகள் கல்குவாரிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டம் நடத்தினர்.
கண்டமனூர் செல்லும் ரோட்டில் தேக்கம்பட்டி பிரிவிலிருந்து வைகை ஆறு செல்லும் வழியில் கல் குவாரிகள் செயல்படுகிறது.
குவாரியிலிருந்து கொண்டுவரப்படும் ஜல்லி கற்கள் மற்றும் கிராவல் ஆகியவை 2 கி.மீ., தூரம் விவசாய நிலங்களின் நடுவே உள்ள பாதை வழியாக மெயின் ரோட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
வரும் வழியில் இரு புறங்களிலும் விவசாய நிலங்களில் தூசிகளால் பயிர்கள் பாதிப்படைவதாகவும், குவாரியில் வெடி வைப்பதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து குவாரி உரிமையாளர்கள், கனிம வளத்துறையினர் மற்றும் போலீசாரிடம் விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து குவாரிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டமனூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.