வைகை அணையில் நீர் இருப்பு குறித்து அமைச்சர் ஆய்வு
ஆண்டிபட்டி : வடகிழக்கு பருவ மழையால் வைகை அணைக்கு வரும் நீர் வரத்து, அணையின் நீர் இருப்பு குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வைகை அணையில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ந்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து திடீரென்று உயர்ந்தது. டிசம்பர் 13 இரவில் நீர்வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 15,775 கன அடி வரை உயர்ந்து, பின்னர் படிப்படியாக குறைந்தது. அணைக்கு வந்த அதிகப்படியான நீர் வரத்தால் டிசம்பர் 13ல் 49.67 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 59.02 அடியாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் அணை நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. வைகை அணை நிலவரம் குறித்தும் அணைக்கான நீர் வரத்து, நீர்மட்டம் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்த அமைச்சர் பெரியசாமி, கூடுதல் விபரங்களை அதிகரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணகுமார் (பெரியகுளம்), மாவட்ட பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலர் லில்லி, வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின் வைகை அணை நீர்த்தேக்கம், நீர் வெளியேறும் மதகுகளின் நிலை குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். 58ம் கால்வாயில் தற்போதுள்ள சூழலில் நீர் திறப்புக்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.