துபாய் உணவு பொருள் கண்காட்சி இந்திய ஏலக்காய்க்கு ஆர்டர்கள்
கம்பம்,:துபாயில் ஒரு வாரமாக நடைபெற்ற வளைகுடா நாடுகளுக்கான உணவு பொருள் கண்காட்சியில் இந்திய ஏலக்காய்க்கு அதிகம் ஆர்டர் கிடைத்துள்ளது.
துபாயில் ஆண்டுதோறும் ரம்ஜானை முன்னிட்டு உலக உணவு பொருள் கண்காட்சி நடைபெறும். இதில் பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து காட்சிப்படுத்துவர். இந்தியாவில் இருந்து ஏலக்காய் ஏற்றுமதியாளர்கள் ஸ்டால் அமைப்பது வழக்கம்.
இந்திய ஏலக்காய்க்கு துபாய், கத்தார், அபுதாபி, குவைத் நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. அங்கு வீடுகளில் ஏலக்காயிலிருந்து தயாரிக்கப்படும் பானம் வீடுகளில் காபி போன்று அருந்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தவதும், குவாதிமாலா நாட்டு ஏலக்காய் விலை குறைவாக கிடைத்ததாலும் இந்திய ஏலக்காய்க்கு வரவேற்பு குறைந்தது. இந்தாண்டு குவாதிமாலாவில் ஏலக்காய் உற்பத்தியில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
துபாயில் ஒரு வாரமாக உணவு பொருள் 25 என்ற கண்காட்சி நடந்தது. இந்தியாவில் இருந்து ஏலக்காய் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் பங்கேற்ற கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஜி. விநாயகமூர்த்தி கூறுகையில், ‘கடந்தாண்டு குறிப்பிடும் படி ஆர்டர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு எல்லா நிறுவனங்களுக்கும் ஒன்றிரண்டு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. 100 டன் வரை ஆர்டர் கிடைத்துள்ளது. குவாதிமாலா ஏலக்காய் விலையும் அதிகம் என்பதால் நமக்கு ஆர்டர் கிடைத்துள்ளது’ என்றார்.