மக்கள் மகிழ்ச்சி போடி – சூலப்புரம் புதிய வழித் தடத்தில் அரசு பஸ் வசதி
போடி: போடியில் இருந்து புதிய வழித்தடமான சூலப்புரம் கிராமத்திற்கும், கோணாம்பட்டி, பூதிப்புரம் செல்ல நேற்று முதல் அரசு பஸ் இயங்க துவங்கியது.
போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரம் கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். சிலமலை மெயின் ரோட்டில் இருந்து சூலப்புரத்திற்கு ரோடு வசதி இருந்தும், பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் போடி, தேவாரம் செல்ல வேண்டும் என்றால் ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து. டூவீலரில் சிலமலை மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஏற வேண்டும். பஸ் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் நடந்து வருவதோடு, விவசாய விளை பொருட்களை கொண்டு வர சிரமம் அடைந்தனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் புதிய வழித்தடமாக போடியில் இருந்து சூலப்புரம் வழியாக சின்னமனுார் செல்ல நேற்று முதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. மேற்கு தி.மு.க., ஒன்றியச் செயலாளர் லட்சுமணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோல தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் போடி – கோணாம்பட்டி, பூதிப்புரத்திற்கு அரசு பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது. கோணாம்பட்டி செல்லும் அரசு பஸ்சை சின்னமனுார் ஒன்றிய செயலாளர் முருகேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். போடி – பூதிப்புரத்திற்கும் அரசு பஸ் இயக்கப்பட்டது.