மண்டப உரிமையாளருக்கு அபராதம்: தடையை மீறி பட்டாசு வெடிப்பு
கூடலுார்: கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக மண்டப உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலுாரில் திருமணம், காதணி விழா, இறுதி ஊர்வலம் உள்ளிட்ட அனைத்து நிகழ்சிகளிலும் பட்டாசு வெடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் காற்று மாசுபடுவதுடன் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பட்டாசு வெடிப்பை தடை செய்ய வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அனைத்து தொண்டு நிறுவனங்களையும் அழைத்து நகராட்சி சார்பில் கூட்டம் நடத்தி அதில் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டது.
அதன் பின் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடந்த பல்வேறு விசேஷங்களில் நகராட்சியின் உத்தரவை மதித்து பட்டாசு வெடிப்பதை நிறுத்தினர். இந்நிலையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தெரு முழுவதும் பேப்பர் கழிவுகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு மழலையர் பள்ளி அருகில் உள்ள சீலைய சிவன் கோயில் திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் மீண்டும் பட்டாசு வெடித்தால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரித்தனர்.