போடி அருகே விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு வலை
போடி, பிப். 1: போடி அருகே விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே முத்தையன்செட்டிபட்டி கிராமம் உள்ளது. இங்கு புதிதாக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த மதன் (29) என்பவர் சுவர் ஏறி குதித்து அத்துமீறி இந்த மகளிர் சுகாதார வளாகத்திற்குள் சென்று அசுத்தம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க போடி தாலுகா காவல் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் விக்ரமன், சிறப்பு எஸ்ஐ காளிமுத்து ஆகியோர் மதனின் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர். அப்போது மதன் போலீசாரை ஆபாசமாக திட்டி விக்ரமனின் டூவீலர் சாவியை பறித்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து விக்ரமன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.