Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மீண்டும் துவங்கியது சாலை அமைக்கும் பணி

மூணாறு, டிச. 10: கேரள மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பழங்குடியினர் வசிக்கும் ஊராட்சியான இடமலைகுடி மூணாறு அருகே அமைந்துள்ளதுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடமலை குடியில் அடர்ந்த வனத்தினுள் மலைவாழ் மக்கள் 24 குடிகளில் (கிராமம்) வசிக்கின்றனர். அப்பகுதி கடந்த 2010ல் மலைவாழ் மக்களுக்கு தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சி என செயல்படுகிறது.

அங்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் 14 கி.மீ. தூரம் கரடு, முரடான பாதையில் நடந்து சென்று வந்தனர். இந்நிலையில் புல்மேடு முதல் இடலி பாறை வரை கான்கிரீட் ரோடு அமைக்க மலைவாழ் மக்கள் மேம்பாட்டு துறை ரூ.11.5 கோடி நிதி ஒதுக்கியது. இதன் பாகமாக நவம்பர்-2023 பெட்டி முடியிலிருந்து சொசைட்டி குடி வரையிலான சாலையை கான்கிரீட் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பெட்டிமுடி புல்லுமேடு முதல் இடலிபாறை வரையிலான 7.700 கி.மீ., தூரம் கான்கிரீட் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் கட்டுமான பொருட்கள் காடு வழியாக கொண்டு செல்ல வனத்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சாலை பணி முடங்கியது.இதையடுத்து தேவிகுளம் எம்.எல்.ஏ அ.ராஜா-வின் ஈடுபாடு மூலம் சாலை அமைப்பதற்கான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை என்.ஓ.சி வழங்கியது. அதேநேரம் கனமழையால், இடமலைக்குடி செல்லும் சாலையின் கான்கிரீட் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 6 மாதங்களாக முடங்கியிருந்த சாலை கான்கிரீட் பணி மீண்டும் துவங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *