‘ஓபி’ சீட்டு பிரிவு நோயாளிகள் அவதி : அரசு மருத்துவமனையில் முன்கூட்டியே மூடப்படும்
பெரியகுளம்: மாவட்ட அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சீட்டு பதிவு கவுன்டர் நேற்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பூட்டப்பட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
இம்மருத்துவமனைக்கு பெரியகுளம் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து காய்ச்சல், சளி, வயிற்று வலி, கால் வலி, கண், காது உட்பட பல்வேறு சிகிச்சைகளுக்கு தினமும் 400க்கும் அதிகமானோர் வெளி நோயாளியாக வந்து செல்கின்றனர்.
வெளிநோயாளிகள் பதிவு சீட்டு காலை 7:30 மணிக்கு துவங்கி பிற்பகல் 12:00 மணிக்கும், மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 வரை ‘சீட்டு’ பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நேற்று அரை மணி நேரத்திற்கு முன்பாகவே காலை 11:30 மணிக்கு கவுன்டர் பூட்டப்பட்டது.
வெகு தொலைவில் இருந்து குள்ளப்புரம், கோயில்புரம் பகுதியில் காய்ச்சல் பாதித்த வயதில் மூத்த பெண்கள் 30 க்கும் மேற்பட்டோர் கவுன்டரில் பதிவு சீட்டு கேட்டனர். பெண் பணியாளர் நீங்கள் எல்லாம் காலை 7:00 மணிக்கு எல்லாம் வர வேண்டியது தானே என கூறி, கவுன்டரை திறக்க மறுத்து விட்டார். பிறகு 10 நிமிடங்கள் நோயாளிகளிடம் வாய்சண்டை நடத்திவிட்டு திறந்தார். ஏற்கனவே உடலளவில் சோர்வடைந்த நோயாளிகள், மனதளவில் வேதனைப்பட்டனர்.
வெளிநோயாளிகள் சீட்டு பதிவு நேரத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர் காலை 7:30 மணி முதல் 12:00 வரை கவுன்டர் திறக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.நேற்று நடந்த சம்பவத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமார், விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட நோயாளிகள் கோரியுள்ளனர்.