யானைகள் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி
கூடலுார்: கூடலுார் அருகே வனப்பகுதியில் இருந்து காஞ்சிமரத்துறை பெரியாற்றின் கரைப்பகுதி வரை வந்த யானைகள் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியது.
கூடலுார், சுருளியாறு வனப்பகுதியை ஒட்டி வெட்டுக்காடு, பளியன்குடி, ஊமையன் தொழு, காஞ்சிமரத்துரை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இலவமரம், மா, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் அதிகம் நடந்து வருகிறது. அடிக்கடி யானைகள் வந்து, இப்பகுதியில் வளர்ந்துள்ள தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு காஞ்சிமரத்துரையில் இருந்து வெட்டுக்காடு செல்லும் ரோட்டைக் கடந்து முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி வரை யானைகள் வந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். பேயத்தேவன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது தோட்டத்தில் யானைகள் நுழைந்து ஏராளமான தென்னை மரக்கன்றுகளை யானைகள் சேதப்படுத்தின. ஒருமுறை ஆற்றின் கரைப்பகுதி வரை வந்து திரும்பியுள்ளதால் தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி இப்பகுதியில் வரும் நிலை உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து வர வலியுறுத்தி உள்ளனர்.