கால்நடை கன்றுகளுக்கு பரவும் நோயை தடுக்க தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
தேனி: மாவட்டத்தில் கிடாரி கன்றுகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புருசெல்லோசிஸ் நோயை கட்டுப்படுத்தவும் தொடர் தடுப்பூசி முகாம்கள் நடந்தப்பட உள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம்.’ என மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா தெரிவித்தார்.
சமீபகாலமாக மாவட்டத்தில் கிடாரி கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது கண்டறியப்பட்டது. இதனை தவிர்க்க மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள், நோய் புலனாய்வுத் துறையினர், கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்கக் கல்வித்துறை, ஆராய்ச்சி மையம் இணைந்து ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிடாரி கன்றுகளை புருசெல்லோசிஸ் நோய் தாக்குதல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கால்நடை வளர்ப்போர் கோரினர். இதனால் கால்நடை பராமரிப்புத்துறை தடுப்பூசி செலுத்த முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து துறையின் இணை இயக்குனர் கோயில்ராஜா, தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி’ பகுதிக்காக பேசியதாவது:
மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு முடிந்து விட்டதா
70 சதவீதம் முடிந்துவிட்டன. விபரம் சேகரிக்கும் பணி முறையாக நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் பணிகள் முடிந்து, அனைத்து வகை கால்நடைகளின் விபரங்கள் தெரியவரும். கலெக்டரின் வழிகாட்டுதலில் வெளியிடப்படும்.
புருசெல்லோசிஸ்’ நோய் என்றால் என்ன
இந்நோய் கன்று வீச்சு நோய் ஆகும். அதாவது கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய உலகளாவியஒரு பாக்டீரியா கிருமி தொற்று நோயாகும். இந்நோய் கால்நடை பராமரிப்புத்துறையால் புருசெல்லோசிஸ் என அழைக்கப்படுகிறது.
எவ்வகை கால்நடைகள் பாதிக்கும்
இந்நோய் பாதிப்பு 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடாரி கன்றுகள் மட்டும் அதிகளவில் பாதிக்கப்படும். அதனை தடுக்கத்தான் அவற்றிக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
அறிகுறிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உணவு உட்கொள்ளாது. பால் உற்பத்தி குறையும், சினைப்பிடிக்காமை, கன்று வீக்கம் மற்றும் விரை வீக்கம் காணப்படும். மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கவனமாக கையாள வேண்டும். சமைக்கப்படாத மாமிசம், பதப்படுத்தப்படாத பாலை உட்கொள்ளக்கூடாது. கால்நடைகளில் தடுப்பூசி செலுத்தி இந்நோய் பாதிப்பை தடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை
தடுக்கலாம். பதப்படுத்தப்பட்ட பால், பால் பொருட்கள், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை உட்கொள்ளுதல் அவசியம். குறிப்பாக ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாட்கள் முழுவதும் இந்த தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி கிடாரி கன்றுகளுக்கு கிடைக்கும்.
நோயில் இருந்து பாதுகாக்க என்ன வழி
சிறந்ந பராமரிப்பும், தடுப்பூசி செலுத்துவதும் இந்நோயை தடுக்கும் வழி. மாவட்டத்தில் 2023ல் இத்தடுப்பூசி கிடாரி கன்றுகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் தேனி மாவட்டம் முழுவதும் முதல் தவணையில் 12,120, இரண்டாம் தவணையில் 8340, மூன்றாம் தவணையில் 5630, நான்காம் தவணையில் 5440 கிடாரி கன்றுகளுக்கு இதுவரை கன்றுவீச்சு நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் தவணையாக மாவட்டம் முழுவதும் 6440 தடுப்பூசிகள் கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடைமருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள்
கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இலவசமாகநடக்க உள்ளன. இதில் கால்நடை மருந்தகங்கள் உள்ள கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கும் தேதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போரிடம் தெரிவிக்கப்படும். தவறாமல் முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்த வேண்டும். பிப்.20 முதல் மார்ச் 19 வரை தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன