பாசன நீர் திறப்பு வைகையில் அணையில் நிறுத்தம்
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நீர் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாய் ஒரு போக பாசன நிலங்களுக்கும் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக நீர் செல்கிறது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. 5 நாட்கள் அணையில் இருந்து கால்வாய் வழியாக நீரை திறந்தும், 5 நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் வினாடிக்கு 1130 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசன பகுதியில் மழை பெய்வதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 7:35 மணிக்கு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 49.08 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 822 கன அடி.