அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
பெரியகுளம்: கும்பக்கரை, சுருவி அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிப்பகுதி, நீரோடையில் குளித்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
கும்பக்கரையில் பொங்கல் தொடர் விடுமுறை நிறைவு, ஞாயிறு விடுமுறை என்பதால் அருவி நுழைவுப் பகுதிக்கு காலை 7:15 மணி முதல் ஏராளமானோர் டிக்கெட் கவுன்டர் முன்பு ஆவலுடன் காத்திருந்தனர்.
அப்போது சாரல் மழை பெய்தது. காலை 8:00 மணிக்கு ‘கேட்’ திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டனர். அருவியிலும், மேற்பகுதி நீரோடையிலும் சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையுடன் குளித்தனர். காலை 11:30 மணிக்கு சாரல் மழை கனமழையாக மாறியது. இதனை தொடர்ந்து காலை 11:50 மணிக்கு அருவியில் தண்ணீர் அதிகரிக்க துவங்கியது.
ரேஞ்சர் அன்பழகன் தலைமையில் வனத்துறை பணியாளர்கள் ‘விசில் ஊதி’ சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேறுமாறு தெரிவித்தனர். காலை 12:10 மணிக்கு அருவி, நீரோடையில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற துவங்கினார். அருவியின் அக்கரையில் இருந்து, இக்கரைக்கு வருவதற்கு இரும்பு பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாகவும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர்.
கம்பம்: மேகமலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால் கூடுதல் வெள்ள நீர், சுருளி அருவிக்கு வந்தது. இதனால் நேற்று காலை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அருவி பகுதிக்கு ஆய்வு செய்ய சென்ற வனத்துறையினர், நேற்று பிற்பகலில் அருவிக்கு கூடுதல் தண்ணீர் வருவதை கண்டு, பொது மக்கள் குளிக்க தடை விதித்தனர். தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது.