வெள்ளப் பெருக்கால் சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்க தடை அணைப்பிள்ளையார் அணையில் போலீஸ் பாதுகாப்பு
கம்பம் : கனமழையால் நேற்று சுருளி அருவி, கும்பக்கரை அருவி, போடி அணைப்பிள்ளையார் அணை ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்து வருகிறது. பகலில் சாரலாக இருந்த மழை, இரவு முதல் வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால் மேகமலை பகுதியில் இருந்து கூடுதல் வெள்ள நீர் சுருளி அருவிக்கு வந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
நேற்று காலை வழக்கம் போல அருவி பகுதிக்கு ஆய்வு செய்ய சென்ற வனத்துறையினர், படிக்கட்டுகளில் வெள்ளம் பாய்ந்தோடுவதை கண்டனர். அருவியில் அதிகளவு தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில் வெள்ளப் பெருக்கு அடிக்கடி ஏற்படும். ஆனால் படிக்கட்டுக்கள் வழியாக வெள்ள நீர் வழிந்தோடுவது 2016க்கு பின் இப்போது தான் நிகழ்த்துள்ளது. வெள்ளப் பெருக்கு குறைந்தால் தான் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றனர்.
பெரியகுளம்: பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது
கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம், கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு
பெய்த மழை நேற்று வரை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கும்பக்கரை கீழ் நீரோடை பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் தோட்டங்களில் வழியாக சென்றுயாரும் குளிக்கவும், துவைக்க வேண்டாம் என ரேஞ்சர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்ப்பரித்து கொட்டும் அணைப் பிள்ளையார் அணை
போடி: கேரளா, போடி, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்ய துவங்கிய கன மழையானது நேற்று மதியத்திற்கு மேலும் நீடித்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்தது. இதனால் போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன், மீனாட்சியம்மன், புதுக்குளம் கண்மாய்களுக்கு அதிக நீர்வரத்து உள்ளது.
போடி – மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் தடுப்பணையை தாண்டி வெள்ளியை உருக்கி விட்டார் போல ஆர்ப்பரித்து அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், மக்களும் குளிக்க தடை விதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.