மூல வைகை ஆற்றில் கனமழையால் வெள்ளப் பெருக்கு
கடமலைக்குண்டு:மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு பகுதியில் விடிய விடிய பெய்த கன மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களாக வருஷநாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் குறைந்த நீர் வரத்தே இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வருஷநாடு, வாலிப்பாறை, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மூல வைகையில் இருந்து வரும் நீர் மயிலாடும்பாறை அருகே நீர்வளத்துறை மூலம் அளவீடு செய்யப்படுகிறது. நேற்று மதியம் மூல வைகை ஆற்றில் வினாடிக்கு 19,000 கன அடி வரை நீர்வரத்து இருந்ததாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். மூல வைகையாற்று நீர் இரு கரைகளையும் தொட்டு செல்வதால் கரையோர பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போலீசார், வருவாய்த்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
மூல வைகை ஆற்றில் வரும் நீர் வருஷநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம் கண்டமனூர், அம்மச்சியாபுரம் வழியாக வைகை அணைக்கு செல்கிறது. நேற்று மதியம் 2:00 மணிக்கு வைகை அணைக்கு மூல வைகை ஆறு மூலம் வினாடிக்கு 7970 கன அடி நீர் சென்றடைந்தது. நேற்று காலை அணை நீர்மட்டம் 49.67 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பதால் நேற்று மாலை 4:00 மணிக்கு 50.66 அடியாக உயர்ந்தது. வைகை அணை நீர்மட்டம் விரைந்து உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.