தேனி கலெக்டர் அறிவிப்பு : முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக் கு தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தளவாடப் பொருட்களை தமிழக நீர்வளத்துறையினர் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அணைப்பகுதியில் உள்ள ஆய்வாளர் மாளிகை, அணை பகுதிக்கு செல்லும் ரோடு, பொறியாளர் குடியிருப்பு, ஷட்டர்களுக்கு கிரீஸ், அணை மற்றும் ஷட்டர் பகுதிகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
2024 ம் ஆண்டிற்கான பராமரிப்பு பணிகளுக்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல தமிழக நீர்வளத் துறையினர் கேரள வனத்துறையினரிடம் மே மாதம் அனுமதி கேட்டனர். ஆனால் கேரள நீர்ப்பாசன துறையினரிமிருந்து ஒப்புதல் கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என கேரள வனத்துறை அனுமதி தர மறுத்தது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் மத்திய அணை கண்காணிப்பு குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர். அக்டோபரில் நடந்த துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வையும் புறக்கணித்தனர். இருந்தபோதிலும் எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் டிச.4ல் எம்.சாண்ட் 4 யூனிட் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை இரண்டு லாரிகள் மூலம் வள்ளக்கடவு வழியாக அணை பகுதிக்கு தமிழக அதிகாரிகள் கொண்டு சென்றனர். வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் கேரள நீர்ப்பாசனத் துறையின் ஒப்புதல் கடிதம் வேண்டும் என்ற காரணத்தைக் கூறி கேரள வனத்துறை அனுமதி மறுத்தது. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைச் சாவடிக்கு அருகிலேயே அனுமதி கிடைக்காமல் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இச் சம்பவத்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் குமுளி லோயர்கேம்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இருந்த போதிலும் லாரிகளை அனுமதிக்காததால் எம்.சாண்டை சோதனைச் சாவடிக்கு அருகிலேயே கொட்டிவிட்டு லாரிகளை திருப்பி எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று தளவாடப் பொருட்களை அணைப்பகுதிக்கு லாரி மூலம் வள்ளக்கடவு வழியாகவும், தேக்கடியில் இருந்து படகு மூலமாகவும் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தேனி கலெக்டர் சஜீவனா அறிவித்துள்ளார். இந்த அனுமதியால் நாம் தமிழர் கட்சியினர் லோயர்கேம்பில் நேற்று மாலை நடத்த இருந்த முற்றுகைப் போராட்டம் ரத்து செய்வதாகவும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.