கலெக்டர் உறுதி : இட மலை குடியில் அனைத்து வசதிகள் செய்து தரப்படும்
மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும், என இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.
மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட திட்டப் பிரிவு தலைமையில் சொசைட்டிகுடியில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் விக்னேஸ்வரி, தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட திட்ட அலுவலர் தீபாசந்திரன், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், திறன் மேம்பாடு, ரோடு, பாலம், பெண்கள் அதிகாரம், பொது போக்குவரத்து, வீடு கட்டும் திட்டம், குடிநீர், மகளிர் சுய உதவி குழு, ஊட்டசத்து வழங்கல் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது. பாறைகுடி அங்கன்வாடி, ஓராசிரியர் பள்ளி, இடமலைகுடி அரசு ஆரம்ப பள்ளி ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பல கிலோ மீட்டர் தூரம் கரடு, முரடான வழியில் பயணித்து, முக்கிய நோக்கத்துடன் கூட்டம் நடத்தப்பட்டது. இங்கு மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ள வேண்டும். அற்ப விசயங்களுக்காக திட்டப் பணிகள் தடைபட கூடாது, என கலெக்டர் தெரிவித்தார்.