நிரம்பிய ஹைவேவிஸ் அணை மலைப் பாதையில் மண் சரிவு
கம்பம், : மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஹைவேவிஸ் அணை நிரம்பி,உபரி நீர் சுருளி அருவிக்கு செல்கிறது. மணலாறு
அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணை நிரம்பி உபரி நீர் முல்லைப்பெரியாற்றில் கலந்து வருகிறது.
நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சுருளி அருவியில் நேற்றும் அருவிக்கு தண்ணீர் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேகமலை பகுதியில் உள்ள ஹைவேவிஸ் அணை தனது முழு கொள்ளைவான 1505 மீட்டர் நிரம்பியுள்ளது. உபரி நீர் வியர் அணை வழியாக சுருளி அருவிக்கு செல்கிறது. அதற்கடுத்துள்ள மணலாறு அணை தனது முழு கொள்ளளவான 1492 மீட்டரை இன்னமும் எட்டவில்லை.
14 87 மீட்டராக உள்ளது. 1490 மீட்டராக உயரும் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு தூவானம் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஹைவேவிஸ் மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மண்சரிவுகளை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஹைவேவிஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி ரத்து செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.